Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: திரு நபி சரித்திரம் சார்ந்த நூல்கள்
مصادر السيرة النبوية (1)
மௌலவி எம். எம்.ஸகி B.A .(Hons) மதீனா

ஹதீஸ்                                      

இஸ்லாமிய வரலாறு

அழைப்புப் பணி

குடும்பவியல்

முஸ்லிம் பெண்

இஸ்லாமிய உலகம்

இஸ்லாம் அறிமுகம்

நவ முஸ்லிம்கள்

ஐயமும் தெளிவும்

நேர்காணல்

மருத்துவம்

நூலறிமுகம்

போட்டிகள்

 உரைகள்

 பொதுவானவை

 பரிபாசை

 

         நபி (ஸல்) அவர்களுடைய வரலாறு பல வகையான நூல்களில் பதிவாகியுள்ளது. அவை இரண்டு வகைப்படுகின்றன. அவை வருமாறு:

 

1. மூல நூல்கள்

2. துணை நூல்கள்

 

மூல நூல்கள்

 

         இதில் அல்-குர்ஆன், ஹதீஸ் கிரந்தங்கள், நபித்துவத்தின் சான்றுகளான அற்புதங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்கள், நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றுத் தொகுப்புக்கள், பொதுவான வரலாற்று நூல்கள் போன்றன அடங்குகின்றன.

 

துணை நூல்கள்

 

         இதில் நபி (ஸல்) அவர்களுடைய சரிதை, வரலாறு போன்றன சாராத ஏனைய துறைகளில் எழுதப்பட்ட நூல்கள் உட்பட இலக்கிய நூல்கள், கவிதைத் தொகுப்புக்கள், அறிவிப்பாளர்கள் தொடர்பான வரலாற்று நூல்கள், வரலாற்றுப் புவியியல், சட்ட நூல்கள், அறேபியரின் குல கோத்திரங்கள் பற்றிய நூல்கள் போன்றன அடங்குகின்றன.

 

         நபி (ஸல்) அவர்களது வரலாற்றைப் படிக்கின்ற ஒருவர் மேற்படி இரு வகையான நூல்களையும் தன்னகத்தே பெற்றுக் கொண்டால் அவற்றின் மூலம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி மிகச் சரியானதும் விரிவானதுமான ஒரு கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, மேற்படி நூல்களின் பெறுமானத்தையும் அவற்றைக் கையாள வேண்டிய முறைகளையும் தெரிந்துகொள்வது மிக அவசியமானதாகும். மேற்படி நூல்கள் தருகின்ற செய்திகள் சில வேளைகளில் உறுதியானவைகளாகவும், சில வேளைகளில் பலவீனமானவைகளாகவும் காணப்படுகின்றன. அதே போன்று, அவை அடிப்படையான தகவல்களாகவோ காரண காரியங்களை எடுத்துக் கூறுவனவாகவோ இருக்கலாம். எனவே, அந்நூல்கள் அனைத்தையும் ஒரே வரிசையில் வைத்து நோக்கக் கூடாது. ஏனெனில், வரலாறு அல்லது இலக்கிய நூல்களில் காணப்படும் தகவல்களோ செய்திகளோ அல்-குர்ஆன் வசனத்துடனோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸுடனோ எக்காரணங் கொண்டும் முரண்பட முடியாது. ஆகவே, அந்நூல்களை மிகச் சரியான முறையில் வகைப்படுத்தி, வரிசைப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

 

         நபி (ஸல்) அவர்களது வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற நூல்களில் அல்-குர்ஆன் முதலிடம் பெறுகின்றது. அல்-குர்ஆன் என்பது அல்லாஹ்வின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனுடைய கருத்து, வார்த்தை ஆகிய இரண்டுமே வஹீ எனும் வேத வெளிப்பாடாகும். அதில் காணப்படும் சட்டங்களுடன் தொடர்பான வசனங்கள் இஸ்லாமிய அரசின் சட்டங்களைத் தெளிவுபடுத்தக்கூடியவை என்ற வகையில் அவை மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. மேலும், அவற்றின் அடிப்படையில்தான் முதலாவது இஸ்லாமிய ஆட்சியின் சமூக, பொருளாதார அரசியல் துறைகளை நபி (ஸல்) அவர்கள் நிருவகித்தார்கள்.

 

         அவ்வாறே, அல்-குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் காலத்துச் சில வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுகின்றது. இதற்கு பத்ர், உஹ்த், கந்தக், ஹுனைன் போன்ற யுத்தங்களை உதாரணமாகக் காணலாம். அப்போர்கள் நடைபெற்ற காலச் சூழல், பொருளாதார நிலை, மனோ நிலை போன்றவற்றை மிகத் துல்லியமாகவும் சரியாகவும் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவை வரலாற்று நூல்கள் எதிலிருந்தும் பெற முடியாத தகவல்களாகும்.

 

         அவ்வாறே அறிவுபூர்வமாகவும், சிந்தனா ரீதியாகவும் ஹிஜாஸ் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் காணப்பட்ட பாரிய முரண்பாட்டையும் அவ்விரு தரப்பினரும் மேற்கொண்ட புரட்சிகளையும் அல்-குர்ஆன் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

 

         மேலும், அல்-குர்ஆன் பண்டைய காலச் சமூகங்கள் பற்றிப் பேசுவதனால் இஸ்லாமிய வரலாற்றுத்துறை முன்னைய நபிமார்கள், பண்டைய காலச் சமூகங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி மிக ஆழமாக நீண்டு செல்வதைக் காண முடிகிறது. அவ்வாறே அறபுத் தீபகற்பத்தைத் தாண்டி ரோம – பாரசீகர்களுக்கிடையிலான முரண்பாடுகளை எடுத்துச் சொல்வதனால் முஸ்லிம்கள் உலக வரலாறு, அதிலும் விசேடமாக ரோம், பாரசீகம், துருக்கி, எத்தியோப்பியா போன்ற பல நாடுகள் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ய வேண்டி ஏற்பட்டது. ஆனால், அவ்வாறான வரலாற்று நிகழ்ச்சிகள் தொடர்பான விரிவான விளக்கங்கள் அல்-குர்ஆனில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில் அல்-குர்ஆன் ஒரு வரலாற்று நூலல்ல. மாறாக அது மனு, ஜின் வர்க்கத்தினருக்குப் பூரணமான ஒரு வழிகாட்டியும் யாப்புமாகும். அதில் இடம்பெற்றுள்ள அதிகமான வசனங்கள் இறங்கிய நேரங்கள், இறங்கிய காரணங்கள் போன்றவற்றைத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் அறிந்து கொள்வது ஓரளவு சிரமமான விடயமாகவே காணப்படுகிறது. அதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவை:

 

¨ அவை தொடர்பாக அறிவிப்புக்கள் இடம்பெறாமை.

¨ இடம்பெற்றுள்ள செய்திகள் சிலவேளைகளில் ஒன்றோடொன்று முரண்படுகின்றமை.

 

          ஆகவே, அவற்றைத் திறனாய்வு செய்து ஆதாரபூர்வமானவற்றை முதலில் இனங்காண வேண்டும். பின்னர் முடிந்தவரை அவற்றிற்கிடையிலான முரண்பாடுகளைக் களைய வேண்டும். இங்கு இன்னுமொரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அல்-குர்ஆனின் மூலம் பூரணமான பயனடைய விரும்புவோர் நம்பகமான அல்-குர்ஆன் விரிவுரை நூற்களையே நாட வேண்டும். அதிலும் விசேடமாக இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ (ரஹ்), இமாம் இப்னு கஸீர் (ரஹ்) போன்றோரின் – அறிவிப்புக்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட – விரிவுரைகளை நாட வேண்டும். மேலும், (நாஸிக், மன்ஸூக்) மாற்றிய, மாற்றப்பட்ட வசனங்கள், அவை இறங்கியதற்கான காரணங்கள் போன்றவற்றை விளக்குகின்ற அல்-குர்ஆனியக் கதைகளுடன் தொடர்பான நூல்களையும் நாட வேண்டும்.

 

         சமகால வரலாற்றாசிரியர்களில் பலர் மேற்படி நூல்களை ஓரங்கட்டிவிட்டு மொழி நடையின் ரசனைக்காக அண்மைக் காலங்களில் கீழைத்தேய அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களிலும் அவர்களது கருத்துக்களிலும் தங்கியுள்ளனர். இது அவர்களை அதிக அளவில் தவறில் இட்டுச் சென்றுள்ளதைக் காண முடிகிறது. இதற்கு,

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ

        அவன்தான் எழுத்தறிவு இல்லா மக்களிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்” [அல்-ஜுமுஆ: 2]

 

         என்ற வசனத்திற்குக் கீழைத்தேய அறிஞர்கள் வழங்கியுள்ள விளக்கத்தை உதாரணமாகக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தைப்பற்றி அறியாதவராயிருந்தார், எழுதத் தெரியாதவராக இருக்கவில்லை என்று கூறுகின்றனர். அதே நேரம் அல்-குர்ஆன் அவரைப் பற்றிக் கூறும்போது, எழுத வாசிக்கத் தெரியாதவர் என்று கூறுகிறது. ஆகவே, கீழைத்தேய அறிஞர்கள் கருதுவது போன்று அவர் மார்க்கத்தைப் பற்றி அறியாமையில் இருந்தார் என்று கூறுவது பிழையானதாகும். [நூல்: உலூமுல் குர்ஆன் 15-16, ஆசிரியர்: ஸுப்ஹி அஸ்-ஸாலிஹ்].

 

         நிச்சயமாக அறிவுத் துறையில் தூய்மையும் அமானிதமும் பேணுதல் என்பது எப்போதும் நம்பகமான அல்-குர்ஆன் விளக்க நூல்களை நாட வேண்டும், அல்-குர்ஆன் வசனங்களுக்குரிய சரியான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்பவற்றை வேண்டி நிற்கிறது. ஆகவே, ஒரு கொள்கைக்கு அல்லது ஒரு மத்ஹபுக்குத் துணைபோகும் வகையில் அல்-குர்ஆன் வசனங்களுக்கு மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கங் கொடுக்கக் கூடாது. இதனை நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவர்கள் கூறுவதாவது, யாராவது தனது மனோ இச்சைப்படி அல்-குர்ஆனுக்கு விளக்கங் கொடுத்தால் அல்லது தனக்குத் தெரியாத ஒரு விளக்கத்தை அல்-குர்ஆனுக்குக் கொடுத்தால் அவர் மறுமையில் தனது ஒதுங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும். [நூல்: அபூதாவூத், திர்மிதி]

 

         அதேபோன்று நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுவதில் ஹதீஸ்கள் மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. ஏனெனில், நம்பிக்கைக் கோட்பாடுகள், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள், நோன்பு, தொழுகை, ஹஜ், ஸகாத் போன்ற இபாதத்துக்கள் தொடர்பான சட்டங்கள், அரசியல் சட்டங்கள், பொருளாதார நடைமுறைகள், நிருவாகச் சட்டங்கள் போன்ற அனைத்தையும் அவை தெளிவுபடுத்துகின்றன. எனவே, ஹதீஸ்களின் துணையின்றி இஸ்லாத்தின் உட்கட்டமைப்பைப் பூரணமாக விளங்க முடியாது. மேலும், அவை தெளிவுபடுத்தும் துறைகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும் அதனைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் கலாச்சார, சமூக, பொருளாதார, அரச நிருவாகத் துறைகளுடன் மிக நெருக்கமான தொடர்புடையனவாகும். ஏனெனில், அக்காலத்தில் தமது அன்றாட வாழ்வில் ஸுன்னாவை நடைமுறைப்படுத்துவதில் முஸ்லிம்கள் பெருமளவில் பிடிப்புடன் இருந்தனர். அவ்வாறே புகாரி, முஸ்லிம் போன்ற சில கிரந்தங்கள் யுத்தங்கள், நபி (ஸல்) அவர்களின் வரலாறு போன்றவற்றைப் பதிவு செய்வதற்கென்றே சில பகுதிகளை ஒதுக்கியுள்ளதைக் காண முடிகிறது.

 

          ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள நபி (ஸல்) அவர்களுடைய வரலாறு தொடர்பான அறிவிப்புக்கள் அனைத்தும் நம்பகமானவை. அவற்றை ஆதாரமாகக் கொள்வதும் யுத்தங்கள், வரலாறுகளுடன் தொடர்பான அறிவிப்புக்களைவிட அவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதும் கடமையாகும். அதிலும் விசேடமாக, ஆதாரபூர்வமான நபி மொழி நூற்களில் அவை இடம்பெற்றிருப்பின் அவற்றை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

 

(தொடரும்)

 

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்