Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

       அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் இயல்பாகவே நேர்வழியைக் கண்டறிந்து அதன் வழி நடக்க வேண்டும் என்று விட்டுவிடவில்லை. மாறாக, அவன் காலத்துக்குக் காலம் தூதர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் அல்லாஹ்வின் பால் மக்களை அழைத்தனர். தமக்கு வழிப்பட்டோருக்குச் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறினர்; தம்மை நிராகரித்தோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். அவர்களது வருகையின் மூலம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மனிதனுக்குத் தெளிவாக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ் கூறுகிறான்:

رُّسُلاً مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلاَّ يَكُونَ لِلنَّاسِ عَلَى اللّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ

       தூதர்கள் வந்த பின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தூதர்கள் பலரையும் நன்மாராயங் கூறுபவர்களாகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்)” [அந்-நிஸாஃ: 165].

       மானிடம் அறிவியலிலும் ஏனைய துறைகளிலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. ஒவ்வொரு சமூகத்திற்கும் பொருத்தமான அறிவுரைகள் அல்லாஹ்வின் வேத வெளிப்பாடான வஹீ மூலம் வழங்கப்பட்டு வந்தது. மேலும், ஒவ்வொரு தூதருடைய சமூகத்தினரும் எதிர்கொண்ட அனைத்துப் பிரச்சினைகளையும் அது தீர்த்து வைத்தது. இவ்வாறு மானிடத்துக்கான வழிகாட்டல்கள் பூரணத்துவமடைந்தன.

       தனது இறுதித் தூதுத்துவத்தை உலகத்திற்குக் கொடுக்க நாடிய அல்லாஹ், நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். இதனால், அதற்கு முன்னர் தோன்றிய நபிமார்கள் அனைவரதும் வருகையின் நோக்கமும் பூரணத்துவமடைந்தது. அவருக்கு அருளப்பட்ட மார்க்கம் அனைவருக்கும் பொதுவானதும் நிரந்தரமானதும் ஆகும். அவருக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதத்தின் பெயர் ‘அல்-குர்ஆன்” என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,

       எனக்கும் எனக்கு முன் சென்று போன நபிமார்களுக்கும் உவமை ஒரு மனிதன் கட்டிய வீட்டைப் போன்றதாகும். அவனோ ஒரு வீட்டைக் கட்டி அதனை நன்கு அலங்கரித்தான். ஆனால், அவ்வீட்டின் ஒரு மூலையில் செங்கல் ஒன்று வைக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது. மக்கள் அவ்வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து அதன் எழிலைப் பார்த்து வியப்புறுகிறார்கள். ஆயினும் அந்த இடத்தில் ஒரு செங்கல் மட்டும் வைக்கப்படாமல் விடப்பட்டது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். எனவே, அந்தச் செங்கல் நான்தான். அதாவது, எனது வருகையோடு நபித்துவம் எனும் மாளிகை முற்றுப் பெற்றுவிட்டது. எனவே, குறையாக இருந்த இடத்தைப் பூர்த்தி செய்வதற்கு இனி எந்த நபியும் வரவேண்டியதில்லை” [நூல்: புகாரி].

       அல்-குர்ஆன் முழு மானிட சமூகத்துக்குமான அல்லாஹ்வின் தூதாகும். இதனை ஏராளமான அல்-குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்,

تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا

       “உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்” [அல்-புர்கான்: 1].

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللّهِ إِلَيْكُمْ جَمِيعًا

        நபியே! நீர் கூறுவீராக, ‘மனிதர்களே, மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்” [அல்-அஃறாப்: 158]. — அவருக்குப் பின்னர் எந்தத் தூதரும் வரமாட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்  -  , مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ- முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவரில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்” [அல்-அஹ்ஸாப்: 40].  மானுட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியே அல்-குர்ஆன் இறங்கியுள்ளது. இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட வேதங்களுக்கு அல்-குர்ஆன் அடிப்படையான உரைகல் போன்றதாகும். அல்லாஹ் கூறுகிறான்,

 شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, நபியே, நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்ன வென்றால் நீங்கள் அனைவரும் சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே” [அஷ்-ஷூறா: 13].

       அறேபியருக்கு இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனைக் கொண்டு சவால் விட்டார்கள். அது அவர்களுடைய மொழியிற்றான் இறங்கியது. அவர்களும் அறபு மொழியின் யாப்பிலக்கணத்தில் வல்லுனர்களாக இருந்தனர். அவர்களாற் கூட அல்-குர்ஆன் போன்றதொரு நூலை ஆக்கவோ அல்லது அதில் இடம்பெற்றிருப்பது போன்ற 10 அத்தியாயங்களையோ, குறைந்தது ஒரு அத்தியாயத்தையேனும் ஆக்க முடியாமற் போயிற்று. இதனால், அல்-குர்ஆனின் அற்புதத் தன்மை நிலையாகிவிட்டது. அதன் மூலம் தூதுத்துவமும் உறுதியாயிற்று.

       அல்லாஹ் அதனைப் பாதுகாப்பதாக உறுதி யளித்து விட்டான். திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்படாது, அதிகமான அறிவிப்பாளர் வரிசை மூலம் அது அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்து அதனைக் கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) பற்றி அல்-குர்ஆன் கீழ் வருமாறு கூறுகிறது.  - نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ  - ரூஹுல் அமீன் எனும் ஜிப்ரீல் இதைக் கொண்டு இறங்கினார்” [அஷ்-ஷுஅறா: 193].  மேலும், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுடைய தன்மையைப் பற்றியும் அல்-குர்ஆனின் மகிமையைப் பற்றியும் அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்:

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ . ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ . مُطَاعٍ ثَمَّ أَمِينٍ . وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ . وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ . وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ

       நிச்சயமாக இக்குர்ஆன் மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல்) மூலம் வந்த சொல்லாகும். அவர் சக்தி மிக்கவர். அர்ஷுக்குரிய நாயனிடம் பெரும் பதவி உடையவர். வானவர்தம் தலைவர். அன்றியும் நம்பிக்கைக்குரியவர். மேலும், உங்கள் தோழர் பைத்தியகாரரல்லர். அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். மேலும், அவர் மறைவான செய்திகளைக் கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்” [அத்-தக்வீர்: 19-24].

 إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ . فِي كِتَابٍ مَّكْنُونٍ . لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

     நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர எவரும் அதனைத் தொட மாட்டார்கள்” [அல்-வாகிஆ: 77-79].

       அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட வேறு எந்த வேதங்களுக்கும் இத்தனித்துவங்கள் இருந்ததில்லை. ஏனெனில், அவை குறிப்பிட்டதொரு காலத்துக்கு மாத்திரம் சொந்தமானவையாகவே அருளப்பட்டன. அல்லாஹ் கூறுகிறான்: -   إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ    - நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலராகவும் இருக்கிறோம்” [அல்-ஹிஜ்ர்: 9]. அல்-குர்ஆனின் தூதானது மானிட சமூகத்துக்கு மாத்திரமன்றி, ஜின்களுக்குமுரிய இறைத் தூதாகும். அல்லாஹ் கூறுகிறான:

وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُّنذِرِينَ . قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُّسْتَقِيمٍ . يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ ...

      மேலும் நபியே! நாம் உம்மிடம் இந்தக் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று மற்றவர்களுக்குச் சொன்னார்கள். ஓதுதல் முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். ஜின்கள் கூறினார்கள், எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும் நேரான மார்க்கத்தின் பக்கமும் வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்குப் பதிலளித்து அவர் கூறுவதை ஏற்று அவர்மீது ஈமான் கொள்ளுங்கள்” [அல்-அஹ்காப்: 29-31].

      இவ்வளவு தனித்துவங்கள் நிறைந்த அல்-குர்ஆனானாது, மனிதன் தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்திலும் தலையிட்டு அவற்றைத் தீர்த்து வைக்கிறது. ஆன்மீகம், அறிவியல், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் தோன்றுகின்ற பிரச்சினைகளை அறிவு பூர்வமாகவே அணுகித் தீர்த்து வைக்கிறது.

 

      ஏனெனில், இந்த அல்-குர்ஆன் புகழுக்குரிய, ஞானம் மிக்க அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். இது பொதுவான அடிப்படைகளைப் பேணித் தீர்வுகளை வழங்குகிறது; அவை மனிதனுடைய வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொடுக்கின்றன. எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான அடிப்படைகளையும் அடையாளப்படுத்துகிறது. இதனால், ‘எல்லாக் காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானது’ என்ற தனித்துவத்தை இது அடைந்து கொண்டது. இதனாற்றான் இது நிலையான மார்க்கமாக இருக்கின்றது.

      இவ்விடத்தில் 19ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான ஷஹீத் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் அல்-குர்ஆனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் மிக்க கவனத்திற் கொள்ளப்படத் தக்கன. அவை: “இஸ்லாம் பூரணமானதொரு வாழ்க்கைத் திட்டமாகும். வாழ்க்கையில் எல்லாத் துறைகளையும் அது உள்ளடக்கிக் கொள்கிறது. ஆகவே, அது ஒரு சாம்ராச்சியமும் சிற்றரசும் போன்றது; அல்லது ஒரு அரசும் ஒரு சமூகமும் போன்றது. அது வல்லமையும் பண்பாடுகளுமாகும்; கருணையும் நீதியும் ஆகும்; அது ஒரு கலாச்சாரமும் சட்ட விதிகளுமாகும்; மேலும், அறிவும் தீர்ப்பும் ஆகும்; இன்னும் பொருளும் செல்வமும் ஆகும்; உழைப்பும் வருமானமும் ஆகும்; மேலும், அது உயிர்த் தியாகப் போராட்டமும் அழைப்புப் பணியுமாகும்; அல்லது ஒரு இராணுவமும் சிந்தனையுமாகும்; அதேபோன்று சரிசமனாக அது உண்மையான நம்பிக்கைக் கோட்பாடுகளும் சரியான வணக்க வழிபாடுகளும் ஆகும்” [அத்-தஆலீம்].

   இன்று மனித நேயம் அதன் உட்கட்டமைப்பில் புண்பட்டுப் போயுள்ளது. அதன் சட்ட நடவடிக்கைகளில் நிலைகுலைந்துவிட்டது. பண்பாட்டுத் துறையில் அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. மானிட சமூகத்தை மீட்டெடுக்கும் திராணி அல்-குர்ஆன் தவிர்ந்த வேறு மதங்களுக்கோ சித்தாந்தங்களுக்கோ கிடையாது. அல்லாஹ் கூறுகிறான்:

فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى . وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى

        எவர் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நற்பேறிழக்கவும் மாட்டார். இன்னும் எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். நாம் அவனை மறுமை நாளிற் குருடனாகவே எழுப்புவோம்” [தாஹா: 123-124]. இருள் சூழ்ந்த சட்டங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் மத்தியில் முஸ்லிம்கள் மாத்திரம் ஒளிவீசும் தீபத்தைக் கையில் ஏந்தியுள்ளார்கள். பொய்யான, நிலையற்ற கொள்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்ற மானிட சமூகத்தைப் புனித அல்-குர்ஆனின் மூலம் நிம்மதியும் சமாதானமும் நிறைந்ததொரு புது யுகத்திற்கு இட்டுச் செல்ல முன்வருவது முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.

கடந்தகால வரலாற்றிலே அல்-குர்ஆனின் வழி நடந்த முஸ்லிம்கள் அதன் மூலம் பல நாடுகளையும் ஆட்சி செய்துள்ளனர். அல்-குர்ஆனைக் கொண்டேயன்றி எதிர்காலத்திலும் அதேநிலையை முஸ்லிம்களால் அடைய முடியாது.

Unicode Fonts

News

Softwares

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya M.A.
Text Box: அல்-குர்ஆன் அறிமுகம்
 التعريف عن القرآن

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்